நான் வசிக்கும் அடுக்கக மொட்டை மாடியிலிருந்து அந்தி மாலை வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மருதமலை கோவிலிருக்குமிடத்தில் எரியும் விளக்குகள் இன்னும் சற்று நேரத்தில் தெரிய ஆரம்பிக்கும். தொலைநோக்கியை முதல் மாடியிலிருந்து இங்கு தூக்கிவந்த களைப்பு நீங்க சற்று ஓய்வு எடுத்துக்கொண்டபின், அதை மீண்டும் சரி பார்த்துவிட்டு இரவை எதிர்நோக்கி காத்திருக்கலானேன்.
கோவையில் வானம் இரவில் முற்றிலும் தெளிவாக இருக்கும் நாட்கள் குறைவு. நான் வசிக்கும் பகுதியில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் இரவு வானம் எப்போதும் வெள்ளை வர்ணம் பூசியது போல, நகரின் இரவு ஒளிச்சிதறல்கள் அனைத்தையும் பிரதிபலித்துக்கொண்டிருக்கும். இரண்டாவது மாடிக்கு மேலிருப்பதால், இந்த மொட்டை மாடி, தொலைநோக்கி மூலம் வானைப் பார்க்க வசதியான இடம். மாடிச் சுவரும், பெரிய தண்ணீர் தொட்டியும் தெரு விளக்குகளை மறைத்துக்கொள்ள, இருட்டில் நன்றாகவே வானத்தைப் பார்க்க முடியும். இங்குதான் எனது முதல் 60 மிமீ (மில்லி மீட்டர்) சிறிய குழாய் தொலை நோக்கியுடன் (Short tube refractor) மல்லுக்கட்டி கழுத்து வலிக்க பல இரவுகள் நிலவின் அற்புதங்களில் மூழ்கி, நிலவின் ரசிகனாக மாறியது. அத்ற்கு அடுத்ததாக உபயோகித்தது 127 மிமி ‘காசகரின்’ (Maksutov Casagrain) தொலைநோக்கி. அழகான கருஞ்சிவப்பு நிறம். வசதியாக பார்ப்பதற்கான உபபொருத்தங்கள் கொண்ட அத்தொலைநோக்கி வழியாக இங்கிருந்து பார்த்த மறக்க முடியாத பலவற்றில் ஒன்று வியாழனின் ‘பெரும் சிகப்பு புள்ளி’ (Great Red spot).
முன்பு என்னிடமிருந்த இரண்டு தொலை நோக்கிகளும் எளிதாக எங்கும் எடுத்துச்செல்ல முடிபவை. ஆசை யாரை விட்டது! அடுத்து என்ன என்ன என்ற அரிக்கும் மனதை அமைதிப்படுத்தும் ஆசையின் விளைவுதான் இப்போதிருக்கும் 250 மிமீ .‘டாப்சோனியன்’ (Dobsonian) தொலை நோக்கி. நான்கரை அடி நீளம் ஒரு அடி அகலத்தில் பள பளக்கும் 16 கிலோ கருப்புக் குழாய் தொலைநோக்கி. இதில் பல உபபொருத்தங்களுண்டு. இதை பொறுத்துவதற்கான இரன்டரை அடி உயர 13 கிலோ கீழ் பகுதி பெட்டி அமைப்பு. இத்தொலைநோக்கி பெரிதாக, திறனளவு அதிகமாக உள்ளதாக இருந்தாலும் எளிதாக இயக்கக்கூடிய அமைப்பைக் கொண்டது. இங்கு மி மீ (மில்லி மீட்டர்) என அளவு குறிப்பிடப்படுவது தொலைநோக்கியில் உள்ள லென்ஸ் (Primary lens) அல்லது முதன்மை கண்ணாடியின் (Primary mirror) குறுக்களவைக் குறிப்பதாகும்.
வானில் இருளின் கருமை படர ஆரம்பிக்க, ஆங்காங்கே விண்மீன்கள் கண்களுக்கு புலப்பட ஆரம்பித்தன. ஒளிப் புள்ளிகளாக மருதமலை விளக்குகள். கிழக்கில் சனிக்கோள் இருக்குமிடத்தை மறைத்துக்கொண்டு மேகங்கள். மேற்கு வானில் இன்னும் சற்று நேரத்தில் கீழிறங்கி மறையப்போகும் நான்கு நாள் வயதான நிலவு. . மறைத்துக்கொண்டிருந்த மேகங்கள் திடீரென விலக, கிழக்கு வான மேற்பகுதியில் இதுவரை கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்திருந்த சனிக்கோள், பிரகாசமாக காட்சியளித்தது. தொலைநோக்கியை சனிக்கோளை நோக்கி திருப்பினேன். தொலைநோக்கியில் சனிக்கோளை பார்ப்பது பரவசமூட்டும் அனுபவம். அழகான, வெண்மை கலந்த இள மஞசள் நிறத்தில் கோளும் அதன் வளளையஙகளும். வளையங்களின் நிழல் கோளின் மீது ஒருபக்கமும், கோளின் நிழல் வளையங்களின் மீது ஒருபக்கமும் விழ, சனிக்கோள் பிரமிப்பூட்டும் முப்பரிமாணத் தோற்றத்தில் காட்சியளித்தது. கோளின் துருவப்பகுதி மற்றும் வண்ணப் பிரிவுகள் உட்பட பல விவரஙகள் தெரிந்தன. சனிக்கோளின் மேற்கு துருவப் பகுதி அடர்த்தியான நிறத்திலும் மற்றபகுதிகள் அடர்த்தி குறைவான ஆனால் மிக மங்கலான நிறப் பிரிவுகளைக் கொண்டதாகவும் தெரிந்தன. சனிக்கோள், கோள்களிலேயே மிகவும் அழகானது. வானின் விலைமதிப்பில்லாத ஆபரணம் எனச் சொல்லப்படுவது. சலிக்காது பார்த்துக் கொண்டேயிருக்கலாம். சனிக்கோளின் வளையங்கள் அகலத்தில் 2,71,800 கி. மீ பெரியவை. கனத்தில் மிகவும் குறுகியவை (1கி.மீ). நீர் மற்றும் பனித்துகள்களாலும், தூசிகளாலும் ஆனவை. வானியல் கணக்குப்படி வளையங்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் நமக்கு தொலைநோக்கி வழியே அனைத்தும் சேர்ந்து மூன்று வளையப் பிரிவுகளாகத் தெரியும். முதலில் தெளிவாகத் தெரியும் வளையம் ‘அ’ வளையம். இப்பகுதியில் முன் விளிம்பையொட்டி கண்ணுக்கு எளிதில் புலப்படாத ‘என்க்கே’ (Encke) பிரிவு எனப்படும் ஒரு மிகச்சிறு வளையப்பிரிவு உண்டு. இதைக் காண்பதற்கு மிகவும் தெளிவான வானம் தேவை அதிக திறன் கொண்ட தொலைநோக்கிகள் வழியாக அயராது நோக்கும் சனிக்கோளின் தீவிர பக்தர்கள் சிலர் இதைக் கண்டிருப்பதாக பெருமையாகச் சொல்லிக்கொள்ளுவதுண்டு. நான் பார்த்தவரையில், இந்த ‘என்க்கே’ பிரிவு இதுவரை கண்களுக்கு புலப்பட்டதில்லை. அடுத்தது ‘ஆ’ வளையம். இந்த ‘‘அ’ ‘‘ஆ’ இரண்டு வளையங்களுக்கு நடுவில் கருப்பு நிறத்தில் தெரியும் சிறு பிரிவு, ‘காசினி’ பிரிவு (Cassini division) எனப்படும். இப்பிரிவைக் காண்பததற்கு சற்று பயிற்சி தேவை. ‘காசினி”பிரிவை 127 மி மீ தொலைநோக்கியிலிருந்து பல தொலை நோக்கிகளில் பார்த்துவருகிறேன். வளையங்களின் தற்போதைய சாய்வு நிலையில் , காசினி பிரிவை பார்ப்பது கடினம்.. இதற்கு அடுத்தாற்போலிருக்கும் ஒளி ஊடுருவும் தன்மையிலான ‘இ’ வளையம் ‘கிரீப்’ வளையம் (Crepe ring) எனப்படும்.
சனிக்கோள் வளையங்களின் சாய்வு நிலை எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. 2003 இல் மிகத் துல்லியமாக (இங்குள்ள படத்தில் காணப்படுவதைப் போன்று) தெரிந்த இந்த வளையங்கள் இன்று தொலைநோக்கி வழியாகப் பார்க்கும் போது சாய்வு நிலை மாறி ஏறக்ககுறைய நேராகத் தெரிகின்றன. இன்னும் சிறிது நாட்களில் இந்த வளையஙகள் கண்களுக்கு நேராக சமமாக வரும்போது இவை இருப்பதே தென்படாமல் போகும். மீண்டும் சிறிது சிறிதாக வளையங்களின் சாய்வு நிலை மாற, அவை மீண்டும் தெளிவாக புலப்பட ஆரம்பிக்கும்.
சனிக்கோளின் மீது தெரிபவற்றைத் தெளிவாகக் காண்பதற்கு இரவின் வானத் தெளிவு அவசியம். தெளிவான இரவுகள் கொண்ட பகுதிகளிலிருந்து திறன் மிக்க தொலை நோக்கிகள் மூலம் இக்கோளைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இதன் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களைக் காணும் வாய்புகள் உண்டு. சனிக்கோளுக்கு உபகோள்கள் பல உண்டு. 34 உபகோள்கள் பெயரிடப்பட்டுள்ளன.. இவற்றில் நான்கு அல்லது ஐந்து உபகோள்களை தொலைநோக்கியின் வழியாக சனிக்கோளை பார்க்கும்போது காணலாம்.
சனிக்கோள் கதிரவனிலிருந்து ஆறாவது கோள்; பூமியைப் போல் 9.5 ம்டங்கு பெரியது. கதிரவ மண்டலத்தின் இரண்டாவது பெரிய கோள். முதலிடம் வியாழனுக்கு. சனிக்கோளும் வியாழனைப் போலவே ஹைடிரஜன் மற்றும் ஹீலியம் வாயுகளினால் ஆனது. சனி மற்றும் வியாழன் கோள்கள் வாயு அசுரர்கள் (Gas Giants) என அழைக்கப்படுபவை. சனிக்கோள் ஒருமுறை கதிரவனைச் சுற்றி வருவதற்கு 29.5 வருடஙகளாகிறது. தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 10.25 மணி நேரமெடுத்துக்கொள்ளுகிறது
குறைந்த திறனுள்ள சிறு தொலை நோக்கி வழியாகவும் பைனாகுலர் வழியாகவும் காணும்போது, கோளும் வளையங்களும் தெளிவாகத் தெரியாது. முதலில் என்னிடமிருந்த 60 மி மீ சிறு குழாய் தொலைநோக்கியின் அதிகபட்ச திறன் 60X (மட்ங்கு.) இதில் இக்கோள் மிகவும் சிறியதாகத்தான் தெரியும். நான் முதன்முதலாக சனிக்கோளை பெரிதாகவும், தெளிவாகவும் கண்டது நண்பர் சக்திவேலுடன் கோவை பூ.சா.கோ.தொழில் நுட்பக் கல்லூரியில் உள்ள தொலை நோக்கியில். தெளிவான இரவுகளில் நல்ல தொலைநோக்கி வழியாக 100X இலிருந்து 250X ( மடங்கு) வரை பார்க்கும்போது இக்கோள் மிகத் தெளிவாகத் தெரிய வாய்ப்புண்டு.. கோள் மற்றும் வளையங்களில் காணப்படும் பல விவரங்களை அறியலாம். இதற்கு மேலாக திறனனைக் கூட்டக்கூட்ட, காணும் காட்சி ஒளி குறைந்து நீர்த்து தெரியும். தற்போது நான் உபயோகிக்கும் 250 மி மீ தொலைநோக்கியில் சனிக்கோளை 260X (மடங்கு) அளவுக்கு மேல் தெளிவாகப் பார்க்க வானத் தெளிவு இதுவரை அனுமதித்ததில்லை . சில வருடங்களுக்கு முன்பு,ஒரு தெளிவான இரவில்,சக்திவேலின் 200 மிமீ கணினி இயக்கத் தொலைநோக்கி வழியே சனிக்கோளை 450X அளவில் பெரிதாக பார்த்து பிரமித்ததுண்டு. சிறிது ஒளிமங்கித்தெரிந்த போதிலும் வளையஙகள் மிக அகலமாக காட்சியளித்தன. தொலைநோக்கியில் அன்று பார்த்த சனிக்கோளின் வளையங்கள்,ஒரு மாருதியை அதன் மேல் ஓட்ட முடியுமளவு பெரிதாக காட்சியளித்ததாக வேடிக்கையாக குறிப்பிடுவதுண்டு. தொலைநோக்கி வழியாக வானிலுள்ளவற்றைப் பார்க்கையில் நம் கண்களை வந்து சேரும் ஒளி அணுக்கள் (photons) பல கோடி கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து வருவதால் 10 இலிருந்து 15 நிமிடங்களாவது தொடர்ச்சியாக, தீர்க்கமாக பார்க்கும்போதுதான், பார்ப்பவற்றின் நுண்ணிய விவரங்கள் சில நொடிகளாவது நம் கண்களில் தெளிவாகப் பதிவாகும் வாய்ப்பு உண்டு
சனிக்கோளின் வளையங்கள் கி பி 1610 இல் தான் முதன் முதலில் மனிதக் கண்களுக்குப் புலப்பட்டன. அந்த வருடம்தான் கலிலியோ தொலைநோக்கி வழியே சனிக்கோளின் வளையங்களைக் கண்டார். ஆனால் அவர் உபயோகித்த அந்த சிறிய 50 மி மீ தொலைநோக்கி வழியே அவரால் வளையங்களை தெளிவாகக் காணமுடியவில்லை. இதற்கு 40 வருடங்களுக்குப் பின்னர் நெதர்லாண்ட்டை சேர்ந்த கிரிஸ்டியன் ஹைஜென்ஸ் இவ்வளையங்களை தொலைநோக்கி மூலம் தெளிவாகக் கண்டு அவற்றின் அமைப்பைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்தார்.
சனிக்கோளை பலமுறை தொலைநோக்கி வழியே மற்றவர்களுக்கு காண்பித்ததுண்டு. சிலர் வந்தோம் பார்த்தோம் என ஒருநொடியில் பார்த்து முடித்துவிட்டு நகர்ந்துவிடுவார்கள். மற்றபடி, பலர் இக்கோளின் அழகில் மயங்கி மீண்டும் மீண்டும் பர்த்துக்கொண்டிருப்பதுண்டு. பார்த்தபின் சிலர் மெதுவாக கேட்கும் முதல் கேள்வி ‘இந்தக் கிரகத்தினால் பூமிக்கோ மனிதருக்கோ ஏதாவது பாதிப்பு உண்டா ?’ என்பதே.
சனிக்கோளை அதன் தமிழ்ப் பெயரில் குறிப்பிடும்போது இப்பெயர் நம்மூரில் பயன் படுத்தப்படும் விதம் குறித்து எண்ணாமலிருக்க முடிவதில்லை.. ‘சனி’, ‘சனியன்’ ”சனி பிடித்தவன்’ என்று கீழ்த்தரமாகத் திட்டுவதற்காக இதன் பெயரைப் பயன்படுத்துவதிலிருந்தே நம்மவர்கள் இக்கோளிடம் இல்லாத சக்திகளைப்பற்றி காலம்காலமாகக் கொண்டிருக்கும் கற்பனைகளும், நம்பிக்கைகளும், அதனால் இவர்களுக்கு இக்கோளின் மேலிருக்கும் பயமும் தெரிய வரும். ‘ஏழரை நாட்டுச் சனி’யின் பாதிப்பு பற்றி பாமரரிலிருந்து பட்டம் பல பெற்றவர் வரை தஙகள் அனுபவங்களைச் சொல்லாதவர் குறைவு. இயற்கையின் அழ்கு சொட்டும் இந்த அற்புதத்திற்கு நம்மூரில் பரிகாரங்களும் பிராயச்சித்தங்களும் நடந்துகொண்டிருப்பதை என்னவென்று சொல்லுவது. இக்கோளின் சக்தி தங்கள் வாழ்வைப் பாதிக்கும் என நம்புவர்களுக்கோ, இக்கோளின் உச்சநிலை அல்லது பெயர்ச்சியால் வாழ்வில் இனி வரப்போவதாக உள்ள பிரச்சினைகளைச் சொல்லி பணம் ஈட்டும் சோதிடருக்கோ, இதற்குப் பரிகார பூசை செய்பவருக்கோ வானில் இந்தக் கோள் இருக்கும் திசைகூட தெரியாது. கற்பனைக்கெட்டா தொலைவிலிருக்கும் ஒரு பாவமுமறியாத இந்த சனிக்கோளின் ஈர்ப்புவிசையினால் நம் பூமிக்கோ, இங்குள்ள ஒரு ஈ அல்லது எறும்புக்கோ சிறுதுளி கூட பாதிப்பில்லை.. சனிக்கோளைப் பொருத்தவகையில் பூமிக்கு சம்பந்தமில்லா திசையில், ஏறக்குறைய 140 கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பால் மணிக்கு 36000 கி.மீ அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. நம் பூமியின் வேகம் மணிக்கு 1,07,000 கி மீ – வினாடிக்கு 18.5 மைல்கள் ! இந்த தலை தெறிக்கும் வேகத்தில் வேறொரு வழியில் நாம் கதிரவனைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறோம்.. இன்னும் சொல்லவேண்டுமானால், சனிக்கோளின் அடர்த்தி தண்ணீரின் அடர்த்தியைவிட 30 சதவிகிதம் குறைவு. தண்ணீரில் இக்கோளைப் போட்டால் மிதக்கும் ஐயா, மிதக்கும்!. பாவம், தன் பெயரை பல கோடி கிலோ மீட்டர்கள் தூரத்தில் பூமியில் வாழும் மனிதர்கள் இந்த அளவுக்கு கெடுத்து வைத்திருப்பர்கள் என இக்கோளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எந்த ஒரு கோளின் ஈர்ப்புச் சக்தியும் பூமியை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. இது அறியப்பட்ட, அறிவியல் உண்மை.
புத்தகஙகளிலும், பத்திரிகைகளிலும் புகைப்படங்களாக நாம் காணும் கோள்கள்,விண்மீன் மண்டலங்கள் (Galaxies), விண்மீன் கொத்துக்கள் (Star clusters) நெபுலாக்கள்(nebulae) வண்ணமயமாக பிரமிப்பூட்டும் வகையில் காணப்படுவதைப் பார்த்துவிட்டு தொலைநோக்கி வழியே அவை அப்படித் தெரியும் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். இவற்றின் உருவங்கள் கோடானுகோடி கிலோமீட்டர்கள் தொலைவிலிருந்து பல அடுக்கு அடர்த்தியான வான வெளி வழியே புகைப்படக் கருவிமூலம் பல நிமிட நேரம் பதிவாவதால் புகைப்படங்களில் அவ்வாறு தோன்றுகின்றன. பெரிதாக,பல வண்ணங்களில் புகைப்படமாகப் பதியப்பட்டுள்ள விண்மீன் மண்டலம் (Galaxy) தொலை நோக்கியில் கண்களுக்கு வண்ணங்களற்ற மங்கலான மிகச்சிறு புகை மண்டலம் போலவேத் தெரியும். சனிக்கோள் மட்டும் இதற்கு விதி விலக்கு. நல்ல திறனுள்ள தொலைநோக்கிகள் வழியாக,ஏறக்குறைய புத்தகங்களில் காண்பது போலவே அழகாக காணலாம். பளிங்கினால் செய்யப்பட்டது போல் காட்சியளிக்கும் இதற்கு அடுத்து வியாழனைச் சொல்லலாம். தெளிவான இரவுகளில் திறனுள்ள தொலைநோக்கி வழியாகக் காணும்போது வியாழனும் ஓரளவு புகைப்பபடங்களை ஒத்து இருக்கும்.
கோள்களைத் தொலை நோக்கியில் முதல் முறையாகப் பார்ப்பவருக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுப்பது, கோள்கள் வேகமாக நகர்வது. ஒருசில நொடிகளில் தொலை நோக்கியில் நம் பார்வை பரப்பை (Field of view) விட்டு வெளியே சென்றுவிடும். . பூமியின் சுழற்ச்சியினால் இவ்வாறு நிகழ்கிறது. எனவே, பார்த்துக்கொண்டிருக்கும்போதே தொலைநோக்கியைக் கோள் செல்லும் திசையில்,அதன் வேகத்திற்கேற்ப கையினால் நகர்த்திக் கொண்டேயிருக்க வேண்டும். பூமியின் சுழற்சிக்கேற்ற வேகத்தில் தொலைநோக்கியை நகர்த்துவதற்காக மோட்டார் (Motor Drive) பொருத்தப்பட அமைப்பு உபயோகப்படுத்தப்படுகிறது..
இங்கு பதிவு செய்திருப்பது 2008, செப்டெம்பர் முதல் வார இரவில் சனிக்கோளைப் பார்த்த அனுபவத்தைப் பற்றி. சனிக்கோள் வானில் உதிக்கும்,மறையும் நேரங்கள் நாளுக்குநாள் கூடிக்கொண்டேயிருக்கும். இறுதியாக இரவு தொடங்கும்போது சனிககோள் மேற்கில் மறைவதைப் பார்க்கலாம். இக்கோள் பின்னர் இரவில் தோன்றாது, பகலில் வானில் உலா வந்துகொண்டிருக்கும். கதிரவனின் ஒளியில் பகல் வானிலுள்ள கோள்களோ, விண்மீன்களோ நம் கண்களுக்கு தென்படுவது கிடையாது. கடந்த சில மாதங்களாக பின்னிரவில் தெரியாமலிருந்த சனிக்கோள், இதை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் ( பெப் 2009 இறுதி ) பின்னிரவில் கிழக்கு கீழ்வானில் உதிக்கத் தொடங்கியிருக்கிறது.
பூமியிலிருந்து 1973 முதல் இதுவரை நான்கு விண்கலங்கள் சனிக்கோளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 1977 இல் இரண்டாவதாக அனுப்ப்பட்ட ‘வாயேஜர்-1’ மற்றும் மூன்றாவதாக அனுப்பப்பட்ட ’வாயேஜர்-2’ விண்கலங்கள் அனுப்பிய புகைப்டங்களும் விவரஙகளும் பல புதிய தகவல்களை நமக்கு அளித்ததோடு, சனிக்கோளின் வளையங்கள் பற்றிய பல பழைய கோட்பாடுகளையும், நம்பிக்கைகளையும் சிதறடித்தன. கோளியல் ஆய்வுக்ககான சனிக்கோளின் அற்புதமான புகைப்படங்கள் 30 வருடஙகளுக்கு முன்பே இந்த விண்கலங்களிலிருந்து நமக்கு கிடைத்தன. பல உலக நாடுகளின் கூட்டு முயற்சியாக நான்காவதாக அனுப்பப்பட்ட விண்கலம் ‘காசினி’, 1997 ஆம் ஆண்டு பூமியிலிருந்து புறப்பட்டு ஏழு வருட பயணதிற்குப் பிறகு சனிக்கோளிருக்குமிடத்தை 2004 இல் அடைந்தது இதன் காலம் நான்கு ஆண்டுகள், 2008 இல் இதன் சேவைகள் முடிந்ததுவிடும் என முன்பே நிர்ணயித்திருந்தார்கள். ஆனால் காசினி இன்றுவரை எந்தத் தடங்கலுமின்றி, சனிக்கோளின் தட்ப வெட்ப நிலைகள், வளையஙகள், அதன் உபகிரகங்கள் – குறிப்பாக ‘டைட்டான்’ உபகோள்–ஆகியவற்றைப் பற்றி புகைப்படங்களுடன் பல தகவல்களைத் திரட்டி அனுப்பிக்கொண்டிருக்கிறது. காசினி விண்கலத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கதிரவ மண்டலத்தின் ஒன்பது கோள்கள் இப்போது எட்டாகிவிட்ட கதை உஙகளுக்குத் தெரிந்திருக்கும். புளூட்டோ விலக்கப்பட்டு விட்டது. 2006 இல் தீவிர சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. புளூட்டோ ஆதரவாளர்கள் இன்றும் இதை எதிர்த்து போர்க்கொடி ஏந்திக் கொண்டிருக்கிறார்கள். புளூட்டோவைக் காண்பது கடவுளைக் காண்பது போல. புளுட்டோ கோள்களுக்கான தகுதியிலிருந்து விலக்கப்பட்டதில் இழப்பு ஒன்றுமில்லை. இருக்கும் எட்டு கோள்களில் கதிரவனுக்கும் செவ்வாய்க்கும் இடையிலான நமது பூமி உட்பட்ட, பாறைகளிலான நான்கு கோள்கள் உட்பகுதிக் கோள்கள் எனவும் மீதமுள்ள வாயுகளிலான நான்கு கோள்கள் வெளிப்பகுதிக் கோள்கள் எனவும் அறியப்படுகின்றன. இவற்றில் செவ்வாய் (Mars), வெள்ளி (Venus), புதன் (Mercury), வியாழன் (Jupiter), சனி (Saturn) ஆகிய ஐந்து கோள்களை மட்டுமே வெறும் கண்களால் காண முடியும். நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கோள்களை தொலைநோக்கி உதவியின்று காண முடியாது. இதுவரை நெப்டியூனை நான் கண்டதில்லை - இதைப்பார்ப்பதற்கான முயற்சிகளை நான் இதுவரை மேற்கொள்ளவில்லையென்றே சொல்லலாம். இக்கோளைப் பார்த்த அனுபவம் பற்றி யாரும் பெரிதாக பதிவுசெய்திருப்பதாக நினைவில்லை. ஒரு தெளிவான இரவில் இக்கோளை சக்திவேலின் கணினி தொலைநோக்கியில் பிடித்துவிடலாம் என்றிருக்கிறேன்!
கோவையில் மேகமூட்டமான நாட்கள் அதிகம். கேரளா,சென்னை ஆக எஙகு மழை பெய்தாலும் அது இங்கும் பிரதிபலிப்பதைக் காணலாம். தெளிவான வானைப் பார்த்து ஆசையாக எல்லா ஏற்பாடுகளும் செய்து தொலைநோக்கியுடன் தயாராக இருக்கும்போது சில வினாடிகளில் மேகங்கள் எங்கிருந்தோ வந்து வானம் முழுக்க மூடிக்கொள்ளும். பொறுமையுடன் காத்திருந்தால் ஒருசில சமயங்களில் மேகங்கள் முற்றிலுமோ அல்லது ஒரு பகுதி மட்டுமோ விலக, நாம் வானைப் பார்ப்பதற்கு வழி கிடைக்கும். அல்லது பேசாமல் பெட்டியை கட்டிவிட வேண்டியதுதான். ஓரளவுக்கு இரவில் வானில் பர்க்கப்போவதை முதலில் திட்டமிட்டுக்கொள்ளுவதோடு சரி. மீதியெல்லாம் இயற்கை அனுமதித்தால்தான் நடக்கும். இல்லையெனில் இல்லை. இயற்கையை பொறுமையுடனும் நிதானத்துடனும்தான் அணுக முடியும். அவசரத்திற்கு இங்கு இடமில்லை.
இன்று ஊடகங்கள் வானைப்பற்றியான தகவல்களை ஓரளவுக்கு மக்களுக்கு அளித்துவருகின்றன. ஆயினும் சற்று தலையை உயர்த்தி வானைப் பார்ப்பதென்பது இந்த அவசர உலகில் மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது. நம் நாட்டைப் பொருத்தமட்டில் வானியலை முறையாக கற்பதற்கு வெகு சில கலாசாலைகளே உள்ளன. இங்கே வானிலுள்ள அற்புதங்களை அறிய மற்றும் காண விரும்பும் ஒரு சாதாரண மனிதனுக்கு வழிகாட்டு உதவி எளிதாக கிடைப்பதற்கு வழியில்லை என்றே சொல்லலாம்.
உலகெங்கிலும் வானியலை முறையாகக் கற்ற வானியலாளர்களல்லாமல், வானைப் பார்ப்பதில் ஆர்வமுள்ள வான் ரசிகர்கள்–அமெச்சூர்(amateur) வனியலாளர்கள் உண்டு. இதில் கோள்களில் மட்டும் அதிக கவனம் செலுத்திடும் பிரிவினர் உண்டு. அதுபோலவே நிலவு, கதிரவன், இரட்டை விண்மீன்கள் (Double Stars), ஆழ் வான் காணல் ( Deep Sky Observing) , வால்வெள்ளி (Comet) என ஒவ்வொன்றிற்கான தனித்தனி குழுக்களும் உண்டு. மற்றபடி வானின் அனைத்து அற்புதங்களையும் ரசிப்பவர்கள் அதிகம் உண்டு. தமிழ் நாட்டில் ஆங்காங்கே சில குழுக்கள் இயங்கி வருகின்றன. நண்பர் சக்திவேலுடனும் அவரது முன்னாள் மாணவர் பார்த்திபனுடனும் சேர்ந்து ஆரம்பித்த எங்கள் குழு ஒன்று இங்கு உண்டு. இக்குழுவை நடத்துபவரும், குழுவின் மொத்த உறுப்பினர்களும் இதுவரை நாங்கள் மூன்று பேர்கள் தான்!