பல வால்வெள்ளிகளை முதலில் கண்டறிந்த அமெரிக்கர்களான ஷூமாக்கரும் டேவிட் லெவியும், கண்டுபிடித்த இந்த வால்வெள்ளி மக்களது கவனத்தைப் பரவலாகப் பெற்றதற்கு காரணம் வேறு. வால்வெள்ளிகள் வழக்கமாக கதிரவனைச் சுற்றி வருபவை. 1992 இல் வியாழனது ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு , வியாழனுக்கு 15000 கி மீ அருகில் இந்த வால்வெள்ளி செல்ல, இதன் உட் கரு ஏறக்குறைய 21 துண்டுகளாகச் சிதறிவிட்டது. வியாழனைச் சுற்றிவந்த இந்த வால்வெள்ளியின் சிதறிய துண்டுகள் 1994 ஜூலையில், வியாழனது ஈர்ப்பு எல்லைக்குள் வரும்பொழுது இழுக்கப்பட்டு அதிவேகமாக வியாழனின் மேற்பரப்பில் மோதிவிடும் என்றும், மோதும் நேரம் நொடிக்கணக்கில்வரை துல்லியமாக வானியலார்களால் முன்கூட்டியே கணித்தும் சொல்லப்பட்டுவிட்டது. பின்னர் கேட்கவேண்டுமா? உலகமெங்கும் ஊடகங்கள் இந்த மோதலைக் கொண்டாடி விட்டன.
கோளக வளாகத்தில் நிறுத்திவைக்கப் பட்டிருந்த தொலைநோக்கியின் அருகில் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தேன். நான் அங்கிருந்த நேரம்வரை, அந்த தொலைநோக்கியின் மோட்டார் அமைப்பு ( Motor Drive ) வேலை செய்யவில்லை. மக்கள் வரிசையாகப் பார்க்கும்போது தொலைநோக்கியின் குழாயை அவ்வப்போது யாராவது தொட்டு அசைத்துவிடுவது தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் தொலைநோக்கி வழியே நான் பர்க்கும்போது, அதன் பார்வை பரப்பு (Field of View) வியாழனை விட்டு முற்றிலுமாக விலகியிருந்தது. வெளியே நண்பர்களுடன் வரும்போது வரிசையில் காத்திருந்த பலர் , ‘மோதியாச்சா ?' ‘நன்றாகத் தெரிந்ததா?' என ஆவலுடன் கேட்க , சிரித்துக் கொண்டே பதில் சொல்லாமல் வெளியே வந்துவிட்டோம். பின்னர் மோட்டார் அமைப்பு சரிசெய்யப்பட்டு அங்கு இருந்தவர்களுக்கு தொலைநோக்கியில் வியாழனைச் சரியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். கோளகத்தில் அன்று எத்தனை பேருக்கு வியாழனைப் பார்க்கும் அனுபவம் கிடைத்தது என்பதை விட இந்நிகழ்வு மக்களுக்கு வியாழனை அறிவியல் நோக்கில் நினைவுறுத்தும் ஒரு நிகழ்வாக இருந்தது என்பது மிக முக்கியமான ஒன்று.
பத்திரிகைகளில் பிரசுரமான, விண்கலங்கள் அனுப்பிய புகைப்படங்களில் இந்நிகழ்வு பற்றிய தகவல்களைக் காண முடிந்தது. இந்த மோதல் காட்சியை தொலைநோக்கி வழியே கண்டிருக்க முடியாது என்பதைப் பின்னர் அறிந்தேன். திறன் அதிகமுள்ள தொலைநோக்கி வழியே வியாழனின் மேற்பரப்பை மோதல் நிகழும் நேரம் முழுவதுமாக , மிகக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்திருந்தால் மட்டுமே வியாழனின் மேற்பரப்பில் இம்மோதலால் ஏற்பட்ட ஒருசில மாற்றங்களை ஒருவர் கண்டிருக்க முடியும். வியாழனின் மேற்பரப்பில் இந்த வால்வெள்ளித் துண்டுகளின் மோதலால் ஏற்பட்ட வடுக்கள் மறையச் சிறிது காலம் ஆனது. மோதிய சில துண்டுகள் நம் பூமியை விடப் பெரியவை. என்னிடம் சொந்தமாகத் தொலைநோக்கி ஏதும் இல்லாமலிருந்த காலம் அது. தொலைநோக்கிகள் மூலம் இவ் வடுக்களைப் பார்த்த சிலரது செய்திகளைப் படித்ததோடு சரி. அவற்றைத் தொலைநோக்கி வழியே பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டவேயில்லை.
இரவு வானில் வியாழன் மிகப் பிரகாசமாகத் தெரியும். வெறும் கண்களால் எளிதில் இக்கோளை வானில் இனம் காண முடியும். பெரிய தொலைநோக்கிகளில் காணும்போது வியாழன் சனிக்கோள் போலவே ஒளிமிகுந்து காணப்படும். அதன் மீதான அழகான மேகப் பிரிவுகளையும் (Cloud Bands) தோரணப்பிரிவுகளையும் (Festoons) பார்க்கலாம். வியாழனின் தோரணப்பிரிவுகளிலும், துருவப்பகுதிகளிலும், மற்றப் பிரிவுகளிலும் காணப்படும் பல நுட்பங்களை எனது 250 மி மீ டாப்சோனியன் தொலைநோக்கியிலும் நண்பர் சக்திவேலின் 275 மி.மீ ‘காசகரின்' கணினி இயக்கத் தொலைநோக்கியிலும் கண்டுவருகிறேன். திறன் குறைவான தொலைநோக்கிகளின் வழியே நோக்கும் பொழுது வியாழனின் நடுப்பகுதியில் உள்ள இரு பெரும் மேகப் பிரிவுகள் மட்டும் இரு கோடுகள் போலத் தெரியும். மற்ற நுட்பங்கள் சரியாகத் தெரியாது.
வியாழன் ஏறக்குறைய 1000 பூமிகளை உள்ளடக்கிக்கொள்ளும் அளவு பெரியது. 90% ஹைடிரஜன் வாயுவினாலும் 10% ஹீலியம் வாயுவினாலும் ஆனது. இதன் மேற்பகுதி அடர்த்தியான சிகப்பு, வெள்ளை, மணல் நிறமுள்ள வாயு மேகங்களால் சூழப்பட்டுள்ளது. கதிரவ மண்டலத்திலேயே மிகப் பெரிய கோளான வியாழன் தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் 9 மணி 56 நிமிடங்கள். மிக வேகமாகச் சுழலுவதால் இதன் மேற்பகுதியிலூள்ள வாயு மேகங்கள், மேகப் பிரிவுகளாக (Cloud Bands) அமைந்துவிட்டன.
வியாழனின் மேற்பகுதியில் புயற்சுழல்களும், சுழல் சூறாவளிகளும் நிகழ்ந்துகொண்டேயிருப்பதால் இந்த மேகப்பிரிவுகளினுள் ஏற்படும் சுழல்கள் தோரணங்கள் (Festoons) போன்று காணப்படுவதைத் தொலைநோக்கி வழியே காணலாம். இம்மாதிரியான ஒரு சுழல் பகுதி தான் வியாழனின் புகழ்பெற்ற ‘பெரும் சிவப்பு புள்ளி'(Great Red Spot). மணிக்கு 360 கி மீ வேகத்தில் அது சுழன்று கொண்டிருக்கிறது. பூமியைப் போல மூன்றுமடங்கு பெரியது. 1664 இல் முட்டை வடிவிலான (oval shaped ) இந்தப் பெரிய புள்ளி தொலைநோக்கி வழியே காணப்பட்டு பதிவு செய்யப்பட்டது. 1878 இல் இப்புள்ளியின் ஆழ்ந்த சிவப்பு நிறத்தைக் காரணமாகக் கொண்டு ‘பெரும் சிவப்புப் புள்ளி' எனப் பெயர் சூட்டப்பட்டது. இன்று அது நிறம் நீர்த்துப் போய் காணப்படுகிறது. வானியல் இதழ்கள், இணையம் , வானியல் மென்பொருள் ஆகியவை மூலமாக இப்புள்ளி நமக்கு பூமியிலிருந்து தொலைநோக்கிவழியே தெரியும் நேரங்களைத் தற்போது அறியமுடிகிறது. இப்படி ஒரு நேரத்தில் எனது 127 மி.மீ காசகரின் தொலைநோக்கி வழியே முதன்முதலாக பெரும் சிவப்புப் புள்ளியைக் கண்டது ஓர் அற்புத அனுபவம். நான் அப்போது வைத்திருந்த அந்தத் தொலைநோக்கி கோள்களைப் பார்ப்பதற்கு மிகவும் உகந்த (Planetary Telescope) ஒன்று. வெளிறிய நிறத்தில் தோற்றமளித்த இப்புள்ளியை வியாழனின் சுழற்சியில் அது மறையும் வரை நன்றாகப் பார்க்க முடிந்தது. என்னதான் இதைப்பற்றி புத்தகங்களில் படித்திருந்தாலும், படங்களில் கண்டிருந்தாலும், நேரில் நம் கண்களால் காண்பது என்பது ஒரு வித்தியாசமான அனுபவம். அதிலும் வானில் நாம் முதன் முதலாகப் பார்க்கும் எந்த ஒரு முக்கிய காட்சியும் மனதில் ஆழப் பதிந்துவிடும். தற்போது மற்றொரு ‘சிறு சிவப்புப் புள்ளி' இதற்குச் சற்றே தள்ளி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை நான் கண்டதில்லை.
தொலைநோக்கி வழியாகக் கலிலியோ 1610 இல் வியாழனின் நான்கு பெரிய உபகோள்களை முதலில் கண்டறிந்து பதிவு செய்தார். வியாழனைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் அயோ, யூரோப்பா, கனிமேட், கலிஸ்ட்டோ எனும் இந் நான்கு பெரிய உபகோள்களும் ‘கலிலிய நிலவுகள்' (Galilean Moons) என்றே இன்று அறியப்படுகின்றன. இவற்றை பைனாகுலர்களால் காண முடியும். இவற்றில் கனிமேட் மிகப் பெரியது. இரண்டு புதன் கோள்களின் அளவைக் கொண்டது. வியாழனுக்கு 63 உபகோள்கள் இருப்பதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
வியாழனைத் தொலைநோக்கி வழியே பார்க்கையில் அதைச் சுற்றிவரும் நான்கு பெரிய உபகோள்களையும் ஒளிப்புள்ளிகளாகக் காணலாம். இந்த நான்கு உபகோள்களில் ஒன்றோ இரண்டோ அல்லது மூன்றும் சேர்ந்தோ வியாழனின் பின்புறம் வலம் வருகையில் நம் கண்களுக்குப் புலப்படாது மறைந்துவிடும். மீதியிருக்கும் உபகோளை மட்டும் நம்மால் காண முடியும். சுற்றிவரும் இந்த உபகோள்கள் வியாழனின் பின்னே மறைவதும் பின்னர் அதன் ஏதாவது ஒரு பக்கத்திலிருந்து எட்டிப் பார்ப்பதுமாக முடிவே இல்லாத ஒரு விண்ணுலகக் கண்ணாமூச்சி ஆட்டத்தை இங்கு நடத்திக்கொண்டிருப்பதைக் காணலாம். தற்போது இந்த நான்கு உபகோள்களின் நகர்வுகளையும் இதற்கான மென்பொருள் மூலம் அறிந்துகொள்ள முடியும். வியாழனைத் தொலைநோக்கியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது சில சமயங்களில் இந்த உபகோள்களில் ஏதாவது ஒன்று வியாழனின் மேற்பரப்பைக் கடந்து செல்லும். இவ்வாறு கடக்கும் உபகோளின் நிழல் வியாழனின் மேற்பரப்பில் விழுவதையும், உபகோளின் நகர்வுக்கேற்ப இந்நிழல் வியாழனின் மேற்பரப்பில் நகர்ந்து வியாழனைக் கடப்பதையும் காண்பது ஓர் அபூர்வ அனுபவம். வியாழனின் மேற்பரப்பில் உபகோள்கள் நிகழ்த்தும் இந்நகர்வுகள் 'உபகோள்களின் இடப்பெயர்வு' (Jupiter's satellite transit) என அறியப்படுகின்றன. சில வருடங்களுக்கு முன் ஒரு தெளிவான இரவில் நான் குடியிருக்கும் அடுக்கக மொட்டை மாடியிலிருந்து 127 காசகரின் தொலைநோக்கி வழியே அயோ ( Io) உபகோள் வியாழனின் மேற்பரப்பைக் கடந்த காட்சியை முதன்முதலாகக் கண்டேன். வியாழனின் ஒரு விளிம்பிலிருந்து (limb ) மறு விளிம்பு வரை மெதுவாக இந்த உபகோள் நிஜ நேரத்தில் நகர்ந்து கடந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்றும் மனதை விட்டு அகலாத ‘முதல்' காட்சி அனுபவங்களில் இதுவும் ஒன்று. கதிரவ மண்டலத்தில் வியாழன் பரப்பளவில் முதலிடம் வகிக்கிறது. இதன் குறுக்களவு 1, 42, 984 கிமீ ( 88,846 மைல்கள்). கதிரவனிலிருந்து ஐந்தாவது இடத்திலிருக்கும் இக்கோள் கதிரவனைச் சுற்றிவருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் ஏறக்குறைய 12 ஆண்டுகள். வியாழனின் மேற்பகுதியில் பல மாற்றங்கள் கவனிக்கப்பட்டு வருகின்றன. வியாழனுக்கும் சனிக்கோள் போலவே வளையங்கள் உண்டு என அறியப்பட்டிருக்கிறது. ஆனால் இவை கண்களுக்குப் புலப்படாத அளவு மெலிதானவை. தொலைநோக்கிகளில் பார்க்கும்போது இவற்றைக் காண முடியாது.
தொன்றுதொட்டு மக்கள் வானில் வியாழனை விண்மீன்களின் ஊடே அலைந்து திரியும் ஒரு பயணியாகக் கண்டு வந்திருக்கின்றனர். கிரேக்க புராணிகத்தில் வியாழன் கிரேக்க தலைமைக் கடவுளான ஜீயஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் உபகோள்கள் கிரேக்க கடவுள் ஜீயஸின் பல காதலிகளின் பெயர்களாலேயே அறியப்படுகின்றன. நம் நாட்டைப் பொறுத்தவரையில் வியாழன் ‘குரு' எனும் வலிமை மிகுந்த ஒரு ‘கிரக'மாக பலரால் கருதப்பட்டு வருகிறது. வாழ்வின் பல நிகழ்வுகளில் வியாழனின் பாதிப்பு உண்டு எனப் பலர் நம்பி வருகின்றனர். வியாழன் பூமியிலிருந்து குறைந்தபட்சம் 59 கோடி கிமீ, அதிகபட்சம் 96 கோடி கிமீ தொலைவில் கதிரவனைத் தன்னுடைய பாதையில் நொடிக்கு 13 கி மீ வேகத்தில் சுற்றி வந்துகொண்டிருக்கிறது.
கோள்கள் கதிரவனைச் சுற்றி நீள்வட்டப் பாதைகளில் (Elliptical orbit) வலம் வருகின்றன. இவை பூமிக்கு அருகில் வரும்போது தூரம் குறைவாகவும், பூமிக்கும் கதிரவனுக்கும் மறுபக்கம் பயணம் செய்யும்போது தூரம் மிக அதிகமாகவும் இருக்கும். வியாழனுக்கு இதுவரை 6 விண்கலங்கள் அனுப்பப் பட்டுள்ளன. ஹப்பிள் விண் தொலைநோக்கியும் (Hubble Space Telescope ) விண்ணிலிருந்து வியாழனை தொடர்ந்து புகைப்படங்களெடுத்து அனுப்பிக்கொண்டிருக்கிறது.
செவ்வாய் கோள் வானில் சிவப்பு நிறத்தில் விண்மீன் போல காணப்படும். எளிதில் கண்டுவிடலாம். ஆரஞ்சும் சிவப்பும் கலந்த நிறத்தில் ஒளிமிகுந்த சிறு உருண்டையாக தொலைநோக்கி வழியே பார்க்கையில் காணப்படும். ஆனால் வியாழனில் காண்பது போன்று மேல்பரப்பு நுட்பங்களைத் தெளிவாகக் காண முடியாது. செவ்வாய் அவ்வப்போது பூமிக்கு அருகாமையில் வரும்போது மட்டுமே தொலைநோக்கியில் சில நுட்பங்களைக் காணலாம். அதிலும் பதினாறிலிருந்து பதினெட்டு வருடங்களுக்கு ஒருமுறை பூமிக்கு மிக அருகில் வரும் நேரங்களில் , ஒளி மாசற்ற, வானத் தெளிவு அதிகமுள்ள இடங்களிலிருந்து திறன் அதிகமுள்ள தொலைநோக்கிகள் வழியே பார்க்கும்போது இக்கோளின் மேற்பகுதியில் உள்ள பல நுட்பங்களைக் காணலாம்.
2003, 2005 ஆம் ஆண்டுகளில் செவ்வாய் பூமிக்கு அருகாமையில் வர நேர்ந்தது. 2003 ஆகஸ்ட் 27 ஆம் தேதி பூமிக்கு மிகவும் அருகில் வந்தது. 59,000 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்நாளில் தான் செவ்வாய் இந்த அளவு அருகில் வருவதாக வானியலாளர்கள் தெரிவித்தனர். நண்பர் சக்திவேலும், வானியல் மன்றத்தைச் சேர்ந்த சில மாணவர்களும், நானும் இந்த முக்கிய நிகழ்வைக் காணவும் மக்களுக்குக் காண்பிக்கவும் தயாரானோம்.
சக்திவேலைப் பற்றி இங்கு அவசியம் சொல்ல வேண்டும். இயற்பியல் பேராசிரியர் பதவியிலிருந்து சமீபத்தில் ஓய்வுபெறும் வரை, கோவையிலுள்ள பூ.சா.கோ.தொழில் நுட்பக் கல்லூரியில் மாணவருக்கான வானியல் மன்றம் ஒன்றை 25 ஆண்டுகளாக முழு ஆர்வத்துடன் நடத்தி வந்தவர். கல்லூரியில் ஒவ்வொரு வெள்ளியன்று மாலையும் கூடும் வானியல் மன்றச் செயல்பாடுகளில் சக்திவேலின் நண்பன் என்றமுறையில் பலமுறை கலந்து கொண்டிருக்கிறேன். அங்கு நான்கு தொலைநோக்கிகளுண்டு. எல்லாம் பழையவை. சக்திவேலைப் பொறுத்தவரையில் எந்தப் பழைய, ஒன்றுக்கும் ஆகாத தொலைநோக்கியையும் சரிசெய்து பொறுமையாகக் கையாளுபவர். வானில் காணவேண்டியதை லாகவமாக தொலைநோக்கியில் பிடித்துவிடுபவர். தற்போது கணினி இயக்கம் கொண்ட 275 மி மீ காசகரின் தொலைநோக்கி வைத்திருக்கிறர்.
செவ்வாயைக் காண இரு தொலைநோக்கிகளைத் தயார் நிலையில் வைத்தோம். இரண்டும் பல வருடங்களுக்கு முன் சென்னையில் ‘தேவதாஸ்' செய்த தொலைநோக்கிகள். ஒன்று 150 மி. மீ நியூட்டோனியன் தொலைநோக்கி. ஓரளவுக்கு எளிதாக இயக்க முடியும். அடுத்தது குவி அளவு 10 .(f 10) கொண்ட 200 மி. மீ நியூட்டோனியன் தொலைநோக்கி. இதன் குழாய் 8அடி நீளமும் 11 அங்குல அகலலமும் கொண்டது. இதனைத் தாங்குவதற்காக செய்யப்படிருந்த ஒரு பெரிய Equatorial Mount ஒன்றில் இதைச் சிரமப்பட்டுத் தூக்கிப் பொருத்தியபின் , ஒரு மேசையின் மீது ஏறி நின்றுதான் இதன் கண்ணருகுவில்லை வழியே எதையும் காணமுடியும். 2003 ஆகஸ்ட் 27 ஆம் தேதி பின்மாலை வேளையில் பூ.சா.கோ பொறியியல் கல்லூரியின் வானியல் மன்றம் இயங்கிவந்த, நான்காவது மாடிக்கு மேலிருக்கும் மொட்டை மாடியில் இரு தொலைநோக்கிகளும் செவ்வாயை நோக்கி திருப்பப்பட்டிருந்தன. செவ்வாயைக் காண வரும் மக்களின் தொகை சிறிது சிறிதாக அதிகரிக்கலாயிற்று. தொலைநோக்கி வழியே செவ்வாய் வழக்கத்தை விட இருமடங்கு அளவில் மிகவும் பிரகாசமாகத் தோன்றியது. ஒளிமிகுந்த இளஞ்சிகப்பு கோளின் ஒருபக்கத்தில் வெள்ளைத் தொப்பி வைத்தது போல அதன் துருவப் பனி முகப்பு (Polar Ice Cap) ) பளிச்சென காணக்கிடைத்தது. அவ்வப்போது செவ்வாயின் மையத்தில் சில பகுதிகளைக் காண முடிந்தது.. கூட்டம் நிறைந்து வழிந்தது. இரவு பன்னிரண்டரை மணி வரை மக்கள் ஒவ்வொருவராகத் தொலைநோக்கியில் செவ்வாயைக் கண்டுவிட்டு சென்றது மனதுக்கு நிறைவாக இருந்தது.
2005 ஆம் ஆண்டில் மீண்டும் செவ்வாய் பூமிக்கு அருகில் வந்தபோது இக்கோளைப் போதுமென்ற அளவுக்கு அதிகமாகவே பல இரவுகள் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனது 127 மி.மீ காசகரின் தொலைநோக்கியுடன் இரவில் பல மணி நேரங்கள் செவ்வாயைக் காண்பதில் செலவிட்டேன். இதன் இளஞ்சிகப்பு வண்ணம், துருவப்பனிப் பிரதேசம், கருநீல நிறத்தில் அரூப ஓவியம் போலக் காணப்பட்ட ‘ஒலிம்பஸ் மோன்ஸ்' மலைப் பகுதி , ‘வாலிஸ் மரினாரிஸ்' பள்ளத்தாக்குப் பரப்புகள் அனைத்தும் சித்திரங்களாக மனதில் ஆழப் பதிந்துள்ளன. செவ்வாயின் மேற்பரப்பில் அடிக்கடி ஏற்படும் சூறாவளியால் தூசுப் புயல் (Dust storm) உண்டாகும். அப்போது மேற்பரப்பு காட்சிகளை இத் தூசுப் புயல் முழுமையாக மறைத்துவிடும். மீண்டும் செவ்வாய் பூமிக்கு ஓரளவுக்கு அருகில் ஜனவரி 2010 இல் வரும்.
செவ்வாய் மனித வாழ்வுக்கு தகுதியற்ற இயற்கையும் தட்ப வெட்ப நிலையும் கொண்ட கோள். செவ்வாயில் நம் உலகைப் போலவே மனிதர்களும் பிற உயிர்களும் வாழ்வதாக ஒரு காலத்தில் பலர் நம்பினர். பல கற்பனைக் கதைகள் உலவின. 1774 பிரித்தானிய வானியலாளர் வில்லியம் ஹெர்ஷெல் நம்மைப் போலவே கடல் உள்ள, மேகங்கள் சூழ்ந்த செவ்வாய் கோளில் செவ்வாய் மனிதர் வாழ்ந்துகொண்டிருப்பதாக அறிவித்தார். 1938 அக்டோபர் 30ஆம் தேதி அமெரிக்காவில் செவ்வாயிலிருந்து மனிதர்கள் இறங்கி உலகை முற்றுகையிடுவதாக வானொலிச் செய்தி மீண்டும் மீண்டும் ஒலிபரப்பப்பட மக்கள் பீதியடைந்து தங்கள் இருப்பிடங்களைக் காலிசெய்துவிட்டு தப்பியோட முனைந்தனர். அதிர்ச்சிக்கும் மாரடைப்புக்கும் ஆளான பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இது ஒரு வானொலி நாடகத்திற்கான போலி ஒலிபரப்பென (Mock Broadcast ) பின்னர் தெரியவந்தது. அமெரிக்கர்கள் மறக்க முடியாத இந்நிகழ்ச்சியின் காரணகர்த்தா ஆர்சன் வெல்ஸ் - 1941 இல் ‘சிட்டிசன் கேன்' திரைப்படத்தை இயக்கி அளித்தவர். இவரது 'உலகங்களின் போர்' (War of the Worlds) எனும் இந்த வானொலி நாடகத் தொகுப்பு அன்று மிகவும் பிரபலமானது. தற்போது இணையத்தில் கிடைக்கிறது. போருக்கான கோள் செவ்வாய் என பண்டைய காலத்திலிருந்து அறியப்பட்டு வந்துள்ளது.
பூமியிலிருந்து செவ்வாயின் தூரம் 5.5 கோடி கி மீ 40 கோடி கி மீ வரை, கதிரவனைச் சுற்றிவரும் அதன் பயணத்திற்கேற்ப மாறிக்கொண்டேயிருக்கும். பூமிக்கு அடுத்து இருக்கும் செவ்வாய் கதிரவனிலிருந்து நான்காவது கோள். ஒருமுறை தன்னைச் சுற்றிக் கொள்ளுவதற்கு 24 மணிநேரம் 36 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுகிறது. 1965 இலிருந்து பல விண்கலங்கள் இங்கு அனுப்பப்பட்டுள்ளன. செவ்வாயிலிறங்கி அதன் மேற்பரப்பிலிருந்து ஆய்வுக்கான மாதிரி நிலக் கூறுகள் சேகரிக்கவும், புகைப்படங்களை எடுத்தனுப்பவும் வைக்கிங், மார்ஷியன் லாண்டர் விண்கலங்கள் அனுப்பப்பட்டு ஏராளமான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
புதன் கோள் (Mercury) கதிரவனுக்கு அருகாமையில் முதலிலிருப்பது. இதனால் கதிரவனின் ஒளியில் மறைந்து விடும். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு வாரமோ அல்லது இரு வாரங்களோ வானில் தெரியும். சிலவேளைகளில் மாலையில் மேற்கு வானில் கதிரவன் மறைவதற்கு முன்பும், மறைந்த பின்னும் காணலாம். மற்ற வேளைகளில் கிழக்கு வானில் கதிரவன் தோன்றும் முன் காணலாம். இக்கோளைத் தொலைநோக்கியில் பார்க்கையில் சிறு ஒளி உருண்டையாகத் தெரியும். மேற்பரப்பு நுட்பங்கள் ஒன்றும் கண்களுக்குத் தெரியாது. பைனாகுலர்களே இதற்குப் போதுமானது. வெறும் கண்களாலும் பார்க்க முடியும். மெரினர் 10, மெசஞ்சர் விண்கோள்கள் மூலம் புதன் பற்றிய பல உண்மைகளை அறிந்து வருகிறோம். புதன் பலவிதங்களில் நமது உப கோளான நிலவை ஒத்திருப்பது எனக் கூறப்படுகிறது. புதனுக்கு உப கோள்கள் இல்லை.புதன் தனது பாதையில் பூமிக்கு அருகில் வரும்போது 7.7 கோடி3கி மீ தூரத்திலும், விலகிச் செல்லும்போது அதிகபட்சம் 22 கோடி கி மீ தூரத்திலும் இருக்கும். 4,880 கி மீ அகலமானது. நொடிக்கு 24. 1 கி மீ வேகத்தில் கதிரவனச் சுற்றி வந்துகொண்டிருக்கும் இக்கோள் கதிரவனை ஒருமுறை சுற்றி வருவதற்கு மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளுகிறது.
சூரிய உதயத்திற்கு முன்னர் தொன்றுதொட்டு கிழக்கு வானில் குறிப்பிட்ட மாதங்களில் தோன்றும் விடிவெள்ளி. இதை சில மாதங்களில் மாலையில் மேற்கு வானில் காணலாம். வெள்ளி கதிரவனிலிருந்து இரண்டாவது கோள். மிகுந்த ஒளியுள்ளது. இக்கோளின் கண்ணைப்பறிக்கும் ஒளியில் இதன் மேற்பகுதியின் எந்தக் காட்சிகளையும் தொலைநோக்கியில் காண முடியாது.
தொலைநோக்கி வழியே பார்க்கையில் , வெள்ளி , நம் உபகோளான நிலவைப் போல பிறை நிலைகளில் தோன்றுவதைக் காணலாம். பிறை நிலை நாளுக்கு நாள் கூடுவதும் பின்னர் குறைவதுமாக இருக்கும். ஆனால் நிலவின் அமாவாசை போன்று முற்றிலும் கண்களுக்கு மறைந்துவிடும் நிலை வெள்ளிக்கு கிடையாது. வெள்ளியின் பிறை நிலைகளை தொலைநோக்கி வழியே மட்டுமே காண முடியும். வெறும் கண்களுக்கு வெள்ளி எப்போதும் எந்த மாற்றங்களுமற்ற ஒளிமிக்க விண்மீனைப் போலவே தோன்றும்.
வெள்ளி காதலுக்கும், அழகுக்கும் கடவுளாக பண்டைய கிரரேக்கர்களால் வணங்கப்பட்டது. பூமியிலிருந்து இதன் தூரம் 3.8 கோடி கி.மீ தொலைவிலிருந்து 26கோடி கி.மீ வரை. நொடிக்கு 35 கி.மீ வேகத்தில் கதிரவனை வலம் வந்துகொண்டிருக்கிறது. மேற்பகுதியில் 450 டிகிரி வெப்பத்துடன், கரியமில வாயுவும் சல்ப்யூரிக் அமில மேகங்களும் சூழ்ந்துள்ள இக்கோள் பூமியை விடச் சிறியது. 12, 100 கி.மீ குறுக்களவு கொண்டது.
யுரேனஸ் பூமியிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. முதலில் விண்மீன் எனவே கருதப்பட்டு வந்தது. 1781 ஆம் வருடம் மார்ச் 13 ஆம் தேதி பிரித்தானிய வானியலாளர் வில்லியம் ஹெர்ஷெலால் இது கோள் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 1850 ஆம் ஆண்டுவரை வேறு பெயர்களால் அறியப்பட்டுவந்தது. ஜெர்மானிய வானியலாளர் போட் (Johann Elert Bode) பிற கோள்களைப் போலவே இக்கோளையும் கிரேக்க புராணப் பெயரில் அழைப்பதுதான் சரியென இதற்கு யுரேனஸ் எனப் பெயரிட்டார்.
யுரேனஸ் கோளை முதன்முதலில் எனக்குக் காண்பித்தது நண்பர் சக்திவேல். பூ சா கோ பொறியியல் கல்லூரியிலிருந்த 150 மி.மீ தொலைநோக்கி வழியே இதைக் கண்டோம். மிக அழகான நீல நிறத்தில் சிறிய தட்டாக (Disc) காட்சியளித்தது. அவ்வப்போது சிறிது பச்சை நிறம் சேர்ந்தாற்போல கண்களுக்குத் தெரிந்தது. கோள் மீதான நுட்பங்கள் ஏதும் தெரியவில்லை. பின்னர் இதை விட சக்தி வாய்ந்த எனது தொலைநோக்கியில் பல முறை காணும்போது கூட இந்த அளவு தெளிவுடனோ நிறத்துடனோ கண்டதில்லை. யுரேனஸை கணினி இயக்கத் தொலைநோக்கிகளில் எளிதாகப் பிடித்துவிடலாம். மற்றத் தொலைநோக்கிகளில் தேடிப் பிடித்துப் பார்ப்பதென்பது கடினம். சில நேரங்களில் எனது தொலைநோக்கியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகத் தேடியே இதைக் கண்டிருக்கிறேன். மென்பொருள் மூலம் இக்கோள் இருக்கும் இடத்தின் வானப்பரப்பு வரைபடப் பகுதியை அச்சிலெடுத்துக்கொண்டு அதன் துணையோடு தேடுவது ஓரளவுக்கு சிரமங்களைக் குறைக்கும்.. மென்பொருளுடன் மடிக்கணினியை அருகில் வைத்துக் கொண்டு வழியறிவது மிகவும் உத்தமம். தொலைநோக்கி வழியே வானில் தேடி அலைந்து ஒன்றைக் கண்டறிவது என்பது சொற்களால் விவரிக்க முடியாத, மனதிற்கு மிகவும் திருப்தியளிக்கும் ஒரு தனி அனுபவம்.
யுரேனஸ் கதிரவனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 84 வருடங்களாகிறது. இதில் வளையங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவை மிகவும் மெலிதானவையாகையால் கண்களுக்குப் புலப்படாது. இக்கோள் ஹைடிரஜன், ஹீலியம், பாறைகள், பல வகையான பனித் துகள்களினால் ஆனது. இதுவரை இதற்கு 15 உபகோள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் பல மிகவும் சிறியவை. வாயேஜர்2 விண்கலம் இக்கோளுக்கு 1986 இல் விஜயம் செய்தது.
நெப்டியூன் பூமியிலிருந்து 430 கோடி கி.மீக்கு அப்பால் கதிரவனைச் சுற்றி வருகிறது. கதிரவனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 165 வருடங்கள் எடுத்துக் கொள்ளுகிறது. திறன் அதிகமுள்ள தொலைநோக்கியில் கூட விண்மீன் அளவில் தான் இக்கோளைக் காண முடியும். எளிதில் தேடிப்பிடிக்க இயலாது. வேறு எந்த நுட்பங்களையும் இக்கோளில் காணமுடியாதாகையால் அமெச்சூர் வானியலாளர்கள் இக்கோளைப் பற்றி பெரிதாக அக்கறை கொள்ளுவது கிடையாது.
தொலைநோக்கி வழியே பிறருக்கு கோள்களைக் காட்டும்பொழுது அதிகம் கேட்கப்படும் கேள்விகள், கோள்களின் ஈர்ப்பு சக்தியினால் பூமியில் ஏற்படும் விளைவுகளைப் பற்றியவை. விளைவுகள் ஒன்றுமில்லை என்பதே அறிவியல் உண்மை. ஆனால் அதிகம் படித்தவர்கள் கூட சில சமயங்களில் இதை ஏறுக்கொள்ளுவதில்லை. சோதிட சாத்திரத்தில் கூறப்பட்டிருக்கும் கோள்கள் பற்றிய விவரங்கள் உண்மை என வாதிட ஆரம்பித்து விடுகிறார்கள். ‘கோளாறு' (கோள்+ஆறு) ‘கிரகசாரம்' போன்ற சொற்களும் கூட சோதிட நமட்பிக்கையின் பாற்றட்டே புழங்குகின்றன. பூமியின் மேல் கோள்களின் சக்தி என்ன என்பதை வானியல் உண்மைகளை வைத்து நாம் பார்க்கவேண்டியது அவசியம் .
சோதிடத்தில் கோள்கள் எவ்வாறு சொல்லப்படுள்ளன என்பதைச் சிறிது பார்க்கலாம். சோதிடம் உருவாக்கப்பட்ட பண்டைக்காலத்தில் கதிரவனும், விண்மீன்களும், கோள்களும் நம் உலகை மையமாகக் கொண்டு இயங்கிக்கொண்டிருப்பதாக நம்பப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன் அறியப்பட வான் சார்ந்த விவரங்களும், அப்போதிருந்த நம்பிக்கைகளுமே சோதிடத்தின் அடிப்படை. அப் பண்டைக்கால அடிப்படைகளைக் கொண்டே சோதிடம் இன்றும் இயங்கிவருகிறது. பூமியை வலம் வந்து கொண்டிருப்பதாக சோதிடத்தில் சொல்லப்படும் 'நவக்கிரகங்களில்' , செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஐந்து மட்டுமே கோள்கள். இவை சோதிடத்தில் சொல்லலப்படுவது போல பூமியைச் சுற்றி வருபவை அல்ல. பூமியிலிருந்து பார்க்கையில் அவ்வாறு தோன்றினாலும் உண்மையில் அவை கதிரவனைச் சுற்றி வருபவை என்பதை நாம் இன்று அறிவோம். ‘நவகிரகங்களில்' மீதி நான்கு ‘கிரகங்கள்' எனச் சொல்லப்படுபவை:கதிரவன் (ஞாயிறு) : கோள் அல்ல. பூமியாலும், பிற கோள்களாலும் சுற்றிவரப்படும் விண்மீன்.நிலவு (சந்திரன்) : பூமியின் உபகோள்.ராகு, கேது : நிழல் கிரகங்கள் - Shadow Planets - எனக் கூறப்படும் இவை இரண்டும் கோள்கள் அல்ல. வானில் கதிரவன் நம்மைச் சுற்றிவருவதாக நாம் பூமியிலிருந்து காணும் பாதையும் (Ecliptic), நிலவு நம்மைச் சுற்றி வருவதாக நாம் பூமியிலிருந்து காணும் பாதையும் ஒன்றையொன்று சந்திக்கும் /கடக்கும் இடங்கள் (Nodal points) ஆகும்.
பூமியின் மீது ஒரு கோளின் ஈர்ப்பு சக்தியைக் கண்டறிவதற்கு பூமியிலிருந்து அக்கோளின் தூரமும், அதன் அடர்த்தியும் (Mass) தெரிந்தால் போதும். அடர்த்தி அதிகமானால் ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும், ஆனால் தூரம் கூடக் கூட ஈர்ப்பு சக்தி அதற்கு இரட்டை விகிதத்தில் குறையும். அறியப்பட்ட வானியல் அளவுகளை வைத்துத் தயாரிக்கப்பட்ட ஒரு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பூமியின் மீதான நிலவின் ஈர்ப்பு சக்தியை 'ஒன்று' என அடிப்படை அளவாக எடுத்துக்கொண்டு, கோள்களின் ஈர்ப்பு சக்தி அதனுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. கணிப்புக்கு கோள்களின் சராசரி தூரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
புதன்/ 33 /92 /0.00008வெள்ளி /490/ 42 /0.006
செவ்வாய் /64 /80 /0.0002
வியாழன் /200,000/ 630 /0.01
சனி / 57,000 /1280/ 0.0007
யுரேனஸ் /8,700/ 2720/ 0.00002நெப்டியூன் /10,000/ 4354 /0.00001
நிலவு / 7. 4 /0.384 /1.0
பூமியின் மீது நிலவின் ஈர்ப்பு சக்தியின் அளவு ‘ஒன்று' என்றால் அனைத்துக் கோள்களின் ஈர்ப்பு சக்தியும் சேர்ந்து அதில் 0.017 அளவு தான் உள்ளது எனக் காண்கிறோம். நிலவின் ஈர்ப்புசக்திதான் மிக அதிக அளவில் உலகைப் பாதிப்பது. நிலவின் ஈர்ப்பு சக்தியின் பாதிப்பை பூமியில் வழக்கமாக நிகழும் கடல் ஏற்றம் (high tide) கடல் இறக்கம் (Low tide) மூலம் அறியலாம். இதைத் தவிர நிலவினால் பாதிப்பு என்பது ஏதும் இல்லை.
கோள்கள் அனைத்தும் ஈர்ப்புசக்தி உள்ளவை. ஆனால் பூமிக்கும் அவற்றுக்கும் இடையேயுள்ள தூரங்கள் மிகவும் அதிகம். கோளின் ஈர்ப்பு சக்தி பல கோடி கிலோமீட்டர் கடந்து பூமியை எட்டும்போது முற்றிலும் திறனற்று நீர்த்து விடுவது இயற்கை. மிக அருகிலிருக்கும் நிலவின் அதிக அளவு ஈர்ப்பு சக்தியே நம்மை ஏதும் செய்யமுடியாதபோது பல கோடி கி.மீ தொலலைவிலுள்ள கோள்களிலிருந்து பூமியை அடையும் நீர்த்துப்போன ஈர்ப்பு சக்தியால் பூமிக்கோ, நமது வாழ்வுக்கோ எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது நாமறியும் அறிவியல் உண்மை. நம் உலகுடன் கதிரவனை வலம் வந்து கொண்டிருக்கும் இந்த இயற்கையின் அற்புதங்களைக் கண்டு எவரும் அஞ்சவேண்டிய அவசியமில்லை. கதிரவனின் வலுவான ஈர்ப்புச் சக்தியின் விளைவாகவே பூமி உட்பட்ட எட்டுக் கோள்களும் கதிரவனை அதனதன் பாதையில் சுற்றி வருகின்றன.
கோள்களின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து எட்டாகக் குறைந்துவிட்டதை அறிவோம். இனி குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் கூடலாம். சென்ற அனைத்து நாடுகள் வானியல் மன்ற கூட்டமைப்பு (International Astronomical Union ) 2006இல் ப்ராஹாவில் (Prague) கூடிய போது சில புதிய கண்டுபிடிப்புகள் அங்கீகரிக்கப்பட்டு, கோள்களின் எண்ணிக்கை அதிகமாகலாம் என எதிர்பர்க்கப்பட்டது.. ஆனால் இதற்கு நேர்மாறாக அந்த மாநாட்டில் புளூட்டோ கோளுக்கான தகுதியிலிருந்து விலக்கப்பட்டு, கோள்களின் எண்ணிக்கை எட்டாகக் குறைக்கப்பட்டது. அடுத்த முறை இக் கூட்டமைப்பு சந்திக்கும் போது என்ன மாற்றங்கள் நடக்கும் என இப்போது சொல்ல முடியாது. புளூட்டோ ஆதரவாளர்கள் தயாராக இருக்கின்றனர். புளூட்டோ மீண்டும் கோளாக அங்கீகரிக்கப் படலாம். யார் கண்டது ? தற்போதுள்ள எட்டுக் கோள்களே நமக்குப் போதும்.
# கோள்களின் ஈர்ப்பு சக்தி பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை குறித்தும் கோள்களைப்பற்றி நிலவும் வேறு சில நம்பிக்கைகள் குறித்தும் இங்கு காணலாம் :http://www.etsu.edu/physics/etsuobs/starprty/22099dgl/planalign.htmDr. Donald Luttermoser - East Tennessee State University
- தமிழினி / மே 2009
1 comment:
I very much appreciate your work and effort taken,hope this will be an eye opener for our boys.It will be very use full for us if you can give us Tamil names for known stars.
M.Thomas
Post a Comment